மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு யஷ்திகா பாட்டியா-ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யஷ்திகா பாட்டியா 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹீலி மேத்யூஸும் 22 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - ஹர்மன்ப்ரீத் கவுர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 18 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சஜீவன் சாஜனா 5 ரன்களுக்கும் அமெலியா கெர் 17 ரன்களுக்கும், கமலினி ஒரு ரன்னிலும், சமஸ்கிருதி குப்தா 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த அமஞ்ஜோத் கவுர் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் மற்றும் மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக் லெனிங் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News