கேஎல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுகிறார் - கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் கருத்து!

Updated: Sat, Feb 18 2023 18:01 IST
Image Source: Google

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகுத்து வரும் கே எல் ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு நாள் கே எல் ராகுலை காப்பாற்றி வந்த தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மாவும் தற்போது இல்லாததால் புதிய தேர்வு குழு தலைவர் ராகுலை நீக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ராகுலுக்கு இருக்கும் பிரச்சனை குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ராகுல் பேட்டிங்கில் குறை இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில், “ராகுல் பேட்டிங் செய்யும்போது முன்னாள் வந்து ஆடுவதா இல்லை பின்னால் நின்று ஆடுவதா என்று குழப்பத்தில் இருக்கிறார். பந்து திரும்பும் போது வலது காலை எடுத்து வைக்கிறார். ஆனால் பேட் நேராக இல்லை. பந்து திரும்பும் போது நீங்கள் வலது காலை எடுத்து வைத்து விட்டாலே அந்த பந்தை நீங்கள் விளையாடியாக வேண்டும்.

ஏனென்றால் அப்படி வரும் பந்தை நீங்கள் மிஸ் செய்து எல்பிடபிள்யூ ஆகவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதே ரோகித் சர்மாவை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும். காலுக்கு முன்னால் பேட் வரும்படி அவர் பார்த்துக் கொள்வார். இதனால் தான் ரோகித் சர்மா ரன் அடித்து வருகிறார். ராகுலுக்கு மனதளவில் ஏதோ தயக்கம் இருக்கிறது. அதனை அவர் சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்சுரக்கர், “கே எல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுவது போல் தெரிகிறது. கிரிக்கெட்டில் அதிரடி காட்ட வேண்டும். அதற்காக முதல் மூன்று பந்துகளை தடுத்து விட்டு நான்காவது பந்தை நான் சிக்ஸர் அடிக்க சொல்லவில்லை. விராட் கோலி போல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் .இப்படி செய்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கே எல் ராகுல் வெற்றிகரமாக மாற முடியும். களத்தில் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொண்டு ராகுல் விளையாட வேண்டும்.

ஆட்டமிழந்து விடுவோம் என பயந்து விளையாடினால் உங்களுடைய உள்ளுணர்வு சிதைந்து விடும் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் மார்க் வாக், கேஎல் ராகுல் தன்னுடைய திறமையை நம்பி விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த மாதிரி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட கூடாது . உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைத்து விளையாடுங்கள். உங்களை நீங்களே ஏன் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்? எந்த நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடுங்கள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை