AFG vs IRE, Only Test: ஹஸ்மதுல்லா ஷாஹிதி அரைசதம்; முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!

Updated: Thu, Feb 29 2024 20:51 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் 53 ரன்களையும், கரிம் ஜானத் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க வில்லை. இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்க் அதிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியிலும் கேப்டன் பால்பிர்னி 2 ரன்களிலும், மூர் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய கர்டிஸ் காம்பேர் 49 ரன்களிலும், ஹாரி டெக்டர் 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பால் ஸ்டிர்லிங் அரைசதம் கடந்து அணியை முன்னிலைப் படுத்தினார். 

அவருக்கு துணையாக விளையாடிய லோர்கன் டாக்கர் 46 ரன்களையும், ஆண்டி மெக்பிரைன் 38 ரன்களையும் சேர்க்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஸியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அயர்லாந்து அணி 108 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் 12 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நூர் அலி ஸத்ரான் - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் நூர் அலி ஸத்ரான் 32 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மதுல்லா ஷாஹிது அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக ரஹ்மனுல்லா குர்பாஸும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 53 ரன்களுடனும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை