ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பெட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - மதேவெரா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்கள் எடுத்த நிலையில் மருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வெஸ்லி மதேவெராவும் 25 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரையன் பென்னட் 9 ரன்களுக்கும், ஜானதன் காம்பெல் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய சிக்கந்தர் ரஸா 28 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தியான் மேயர்ஸ் 12 ரன்களுக்கும், கிளைவ் மடாண்டே 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஷுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்ததுடன், அணியின் வெற்றியையும் எளிதாக்கினர்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.