ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் முதல் பந்திலேயே அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் கணக்கை தொடங்கினார். அதன்பின் 12 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய அணி 40 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்நிலையில் இப்போட்டியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
அதன்படி இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை விளாசியது டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை கடந்தார். இதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இந்தியா அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.