பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிமபாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 15 ரன்னிலும், மருமணி 29 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தியான் மேயர்ஸ் 8 ரன்களுக்கும், கேப்டன் கிரெய்க் எர்வின் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சீன் வில்லியம்ஸ் 23 ரன்னிலும், சிக்கந்தர் ரஸா 39 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சர்ட் ந்கரவா 48 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஜிம்பாப்வே அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அகா சல்மான், ஃபசில் அக்ரம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் ஒரு ரன்னிலும், சைம் அயூப் ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த காம்ரன் குலாம் - முகம்து ரிஸ்வான் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காம்ரன் குலாம் 17 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ரிஸ்வான் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் களமிறங்கிய ஆகா சல்மான், ஹசீபுல்லா கான், இர்ஃபான் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 22 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வந்தது. அத்தகைய சூழலில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியானது தாமதமானது.
பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முடிவானது டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் ஜிம்பாப்வே அணியானது 80 ரன்கள் வித்தியாசத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket