ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று புலவாயோவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் - கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பீட்டர் மூர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கர்டிஸ் காம்பெர் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்களுக்கும், ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும், நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கெட் தனது பங்கிற்கு 33 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேத்திருந்த மார்க் அதிர் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேரி மெக்கர்தி, கிரெய்க் யங், மேத்யூ ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதற்கிடையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்டி மெக்பிரைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ - டாம் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் 12 ரன்களைச் சேர்த்த நிலையில் பென் கரண் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கைடானாவுடன் இணைந்த நிக் வெல்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கைடானோ 26 ரன்களுடனும், நிக் வெல்ச் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 188 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News