
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பையும் உடைக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர் தடுமாறினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடி வரும் ரஹ்மத் ஷா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 425 ரன்களைக் குவித்தது.