
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பென்னட் 40 ரன்களுடனும், பென் கரண் 17 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.