SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடித்த கையோடு 148 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் மற்றும் மொமினுல் ஹக் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது 6அவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 12ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 247 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 292 ரன்களைக் குவித்திருந்தது.