
SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 495 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்னிலும், இரட்டை சதமடிப்பார் என் எதிர்பார்க்கப்பட்ட முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் லிட்டன் தாஸ் 90 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 484 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் நஹித் ரானா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 495 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.