
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார். பின் உஸ்மான் கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் தொடர்ந்தனர்.