
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டோமினிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்திய அணியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தான் யார் என்பதை உலகத்திற்கு ஜெய்ஸ்வால் நிரூபித்து காட்டியுள்ளார். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், இன்று 350 பந்துகளை எதிர்கொண்டு 143 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதன் மூலமாகவே வருங்காலத்தில் ஜெய்ஸ்வாலின் ஆதிக்கம் எந்த அளவு இருக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
சதம் விளாசிய பின் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், கொண்டாடிவிட்டு உடனடியாக ரோஹித் சர்மாவிடம் சென்று கட்டியணைத்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று 5 முறை வரை மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு மன உறுதியுடனும், உணர்வுப்பூர்வமாகவும் ஜெய்ஸ்வால் இருந்துள்ளார்.