
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.