
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் சோபிக்க தவறிய நிலையில் பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் உஸ்மான் கவாஜா 16 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய கேமரூன் க்ரீன் 26 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 110 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பியூ வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.