
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு கவாஜா மற்றும் வார்னர் இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 15 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் உள்ளே வந்த லபுஜானே 18 ரன்கள் அடித்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அஸ்வினின் அதே ஓவரில் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, உணவு இடைவேளைக்கு முன்பு வரை 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி சற்று தடுமாறியது. கவாஜா அரைசதம் மற்றும் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னுடன் களத்தில் நின்றனர்.