
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்களையும், ரஹ்மத் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா மற்றும் நியூமன் நியாம்ஹுரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜெய்லார்ட் கும்பி 4 ரன்களுடனும், பென் கரண் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் கும்பி 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய கைடானோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னார் பென் கரண் 15 ரன்களுக்கும், டியான் மேயர்ஸ் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.