
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
இப்போட்டியில் தொடர்ந்து பாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் சகீலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த காம்ரன் குலாம் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார்.