
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது.
இதில் டெம்பா பவுமா 106 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைக் குவித்தது. இதைனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரியான் ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் டேவிட் பெட்டிங்ஹாம் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய கைல் வெர்ரைனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் வெர்ரைன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 100 ரன்களை எடுத்த கையோடு ரிக்கெல்டன் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டனும் 29 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 259 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோரும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.