
Birmingham Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக்- ஜேமி ஸ்மித் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 30 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 269 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 89 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஸாக் கிரௌலி உள்ளிட்டோர் சோபிக்க தவியதன் காரணமாக அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஹாரி புரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர்.