
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத் 2 ரன்னிலும், காம்ரன் குலாம் 12 ரன்னிலும், சௌத் சகீல் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பாபர் ஆசாம் 31 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 58 ரன்களில் பாபார் ஆசாம் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரிஸ்வானும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சல்மான் அகா 19 ரன்களுக்கும், அமர் ஜமால் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.