
Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடக்க வீரர் கேஎல் ராகுல் அரைசதம் கடந்த நிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 17 பவுண்டரிகளுடன் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.