
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் ஒருமுறை சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்த ஜோடி, பின்னர் வந்து ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது.
கடந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் அரைசதம் அடித்தார். அதை சதமாக மாற்றி பல்வேறு சாதனைகளை மீண்டும் படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக 57 ரன்களுக்கு ஜெசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த ஷுப்மன் கில் 10 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பலான முறையில் அவுட் ஆனார். மறுபக்கம் ஓப்பனிங் இறங்கி அரைசதம் அடித்திருந்த ரோகித் சர்மா 80 ரன்கள் இருந்தபோது போல்ட் ஆனார்.