
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் தங்கள் அணியில் சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றாக, எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அணியின் ஆலோசகர் கேரி கிரிஸ்டன், கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி உள்ளிட்டோரை அந்த அணி மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்களாக நெஹ்ரா, கேரி கிரிஸ்டன் மற்றும் இயக்குநராக விகரம் சோலங்கி நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பயிற்சியின் கீழ் அந்த அணி முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதுடன், இரண்டாவது தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.