
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மா, 1100 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 30ஆவது சதமாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் 28ஆவது சதம் இது.