3rd Test, Day 1: சதத்தை நெருங்கிய ஜோ ரூட்; வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது.

Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 99 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பென் டக்கெட்டும், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலியும் அடுத்தடுத்து நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீல் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - ஒல்லி போப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், மறுபக்கம் ஒல்லி போப் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஹாரி புரூக்கும் 11 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதன் கரணமாக இங்கிலாந்து அணி 172 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்தும் மீட்டெடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now