
இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சினால் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் குன்னமேன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும் நேதன் லியான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலேயே ட்ராவஸ் ஹெட் விக்கெட்டை இழந்தாலும் உஸ்மான் கவஜா மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர்.லபுசேன் பூஜ்ஜியத்தில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார் . ஜடேஜா அதை நோபால் ஆக வீசியதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழக்கவில்லை.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக இவர்கள் இருவரும் இணைந்து 96 ரன்களை எடுத்தனர். அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் லபுசேன். அவர் 31 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா இந்தத் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக ஆடிவரும் வீரர் இவர் தான். 61 ரன்களில் இவரும் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.