3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
Trending
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி மார்க் வுட் வேகத்தில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் டாம் ஹார்ட்லி வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா களத்திற்கு வந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் தனது முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து தனது வருகையை பதிவுசெய்தார். அதன்பின் 9 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்கள் சேர்த்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் ரவீந்திர ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இருப்பினும் மறுபக்கம் நிதானமாக விளையாடிய ஜடேஜா தனது 3ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்கள் ஏதுமின்ரியும் என களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now