
Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் செஷனிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களையும், ரிஷப் பந்த் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.