
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் டாம் லேதமுடன் இணைந்த வில் யங் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டாம் லேதம் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த வில் யங் - டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதான்பின் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.