
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் கடந்த நவம்பர் 01ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அத்னபடி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி 263 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.