
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அபிஷேக் சர்மா 29 ரன்களையும், ரிங்கு சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் தலா 53 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த பில் சால்ட் 23 ரன்னிலும், பென் டக்கெட் 39 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 25 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.