
Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஸாக் கிரௌலி 84 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதம்டிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் 46 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 61 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஜடேஜா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுக்கும், அன்ஷுல் கம்போஜ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.