
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் 72 ரன்களில் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் தொடர்ந்து வருகின்றனர்.