
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். சாம் கொன்ஸ்டாஸ் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த கேப்டன் பட் கம்மின்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இதில் கம்மின்ஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை ஒரு ரன்னில் தவறவிட்டார்.