
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அதனை அவரே மறுத்துள்ளார்.