
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கொன்ஸ்டாஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். அதேசமயம் உஸ்மான் கவாஜா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 176 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் லபுஷாக்னே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த சாம் கொன்ஸ்டாஸும் 23 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.