
இலங்கையில் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் இன்று நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியதுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறுவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு குல் ஃபெரொஸா மற்றும் முனீபா அலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குல் ஃபெரொஸா 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலியும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் 10 ரன்களிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் நிதா தர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த அலியா ரியாஸ் - ஃபாதிமா சனா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலியா ரியாஸ் 16 ரன்களையும், ஃபாதிமா சனா 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது.