
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டேவிட் வார்னருடன் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் 21 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மெஹ்ரான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அகிப் இலியாஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியானது 50 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தாடுமாறியது. அதன்பின் வார்னருடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆட்டம் செல்ல செல்ல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். அதிலும் மெஹ்ரான் கான் வீசிய 15ஆவது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக டேவிட் வார்னரும் தனது அரைசதத்தை பதிவுசெய்தார்.