-mdl.jpg)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் ஆஃப்கான் அணி கொடுத்த விக்கெட் வாய்ப்புகளையும் உகாண்டா அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை விளாசியது. இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரானும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக 154 ரன்களை குவித்த நிலையில், 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களைச் சேர்த்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களுக்கும், குல்பதின் நைப் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.