BAN vs IRE, Only Test: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
அயர்லாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது.
இதையடுத்து 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆடிய வங்கதேச அணியில் மொமினுல் ஹக் 17 ரன்னில் மார்க் அடைர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனையடுத்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிப் அல்-ஹசன் 87 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 135 பந்துகளில் சதத்தை எட்டினார். மேலும் இது அவரது 10ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
Trending
அவருடன் இணைந்த லிட்டான் தாஸ் 43 ரன்னில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 126 ரன்னில் ஆன்டி மெக்பிர்னி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் நடையை கட்டினர். கடைசி விக்கெட்டாக மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன்னில் வீழ்ந்தார். 80.3 ஓவர்களில் வங்கதேச அணி 369 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட்டும், மார்க் அடைர், பென் ஒயிட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து திணறியது. இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்திலும், ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் லோர்கன் டக்கர் , ஹாரி டெக்டர் சிறப்பாக ஆடினர்.
இதில் அரைசதம் கடந்ததிருந்த டெக்டர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் தனி ஆளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோர்கன் டக்கர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணிக்காக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லோர்கன் டக்கர் படைத்துள்ளார். மேலும் அயர்லாந்துகாக டெஸ்ட்டில் சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.
அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லோர்கன் டக்கர் 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க் அதிரும் 13 ரன்களோடு ஆட்டமிழந்தார். இருந்தாலும் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆண்டி மெக்பிரைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களைச் சேர்த்தது. இதில் அண்டி மெக்பிரைன் 71 ரன்களுடனும், கிரஹாம் ஹும் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்ப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் 2 வ்க்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து 131 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அயர்லாந்து அணியில் ஆண்டி மெக்பிரைன் 72 ரன்களிலும், கிரஹாம் ஹூம் 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 292 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்ப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், ஷொரிஃபுல் ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் 23 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பாலும் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிம் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now