ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6 ஆம் தேதி கோல்ட் கோஸ்டில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கபட்டது விமர்சனங்களுக்கு உள்ளனது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “ஜிதேஷ் சர்மா விளையாடுகிறார், சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. இதன் அர்த்தம் என்ன? இதில் இனி நாம் லாஜிக்கைத் தேட வேண்டியதில்லை, ஏனென்றால் ஒருவேளை அணிக்கே கூட இது புரியாமல் இருக்கலாம். ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கியபோது, ஜிதேஷ் வரிசையில் கீழே ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை" என்று கூறினார்.