
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக இடதுகை துவக்க வீரரான இஷான் கிஷன் மூன்று போட்டிகளிலுமே இடம் பிடித்து விளையாடினார்.
பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இஷான் கிஷன் இந்த மூன்று போட்டிகளிலுமே தனது அதிரடியை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்றே கூறலாம். ஏனெனில் முதலாவது போட்டியின் போது 42 பந்துகளை சந்தித்து 35 ரன்கள் மட்டுமே குவித்த அவர் இரண்டாவது போட்டியிலும் 10 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே குவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் 34 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இருந்தாலும் முன்பு போன்று அவரிடம் அதிரடி வெளிப்படவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவரின் அதிரடியை நம்பி மும்பை அணி இந்த ஆண்டு அதிகபட்ச தொகையாக அவரை 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளதால் அவரது ஆட்டத்தின் மீது பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.