
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ஹேமங்க் பதானியின் தலைமையில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை முன்னாள் வீரர் அகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர் மற்றும் கேஎல் ராகுலைத் தேர்வு செய்துள்ளார். இதில் கேஎல் ராகுல் சமீப காலமாகவே மிடில் ஆர்டரில் விளையாடி வரும் நிலையில் அவரை மீண்டும் தொடக்க வீரராக அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அணியின் துணைக்கேப்டனான ஃபாஃப் டூ பிளெசிஸ் தொடக்க வீரர் இடத்தில் இருக்கும் சமயத்திலும் ஆகாஷ் சோப்ரா அவருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.