
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கடுத்து 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரினை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது பிசிசிஐ-யானது மிகுந்த கவனத்துடன் அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
இந்நிலையில் ஒருநாள் உலககோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை கட்டமைத்து டி20 அணியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, கேஎல் ராகுல் போன்ற எந்த சீனியர் வீரரும் இல்லாமல் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அடுத்தடுத்து டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரிலும் பங்கேற்க இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக 6 டி20 போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு எஞ்சியிருப்பதினால் இந்த அணித்தேர்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.