இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் ஆரோன் பின்ச் தங்களது நாட்டில் நடக்கும் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் ஆரம்பத்திலேயே 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது அந்நாட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இத்தனைக்கும் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்தும் குரூப் 1 பிரிவில் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த அந்த அணிக்கு டாட்டா காட்டிய இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அரை இறுதிக்கு சென்றுள்ளது. அந்த அணியின் இந்த பரிதாப நிலமைக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சந்தித்த 89 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்வியே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது மற்றொரு காரணமாகும்.
Trending
ஆனால் அவை அனைத்தையும் விட டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறியது முழுமுதற் காரணமாக அமைந்தது. அதை விட கேப்டனாக முன்னின்று வழிநடத்திய ஆரோன் பின்ச் பெரும்பாலான போட்டிகளில் சுமாராக செயல்பட்டது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக 63 (44) ரன்கள் குவித்ததை தவிர பெரும்பாலான போட்டிகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பின்னடைவை கொடுத்த அவர் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் காயத்தால் பங்கேற்கவில்லை. முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை சிறப்பாக வழிநடத்தி வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த அவர் சமீப காலங்களில் இப்படி ஃபார்மின்றி தவிப்பதால் கடந்த மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து 35 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனால் டி20 கிரிக்கெட்டிலும் தடுமாறும் அவர் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைத்து வெற்றியுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனதால் விரைவில் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் ஆரோன் பின்ச் தங்களது நாட்டில் நடக்கும் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஓய்வு பெறப்போவதில்லை. தற்போதைக்கு அந்த எண்ணமும் இல்லை. தற்போதைய நிலைமையில் அடுத்த பிக்பேஷ் தொடரில் நான் விளையாட உள்ளேன். அதில் எப்படி செயல்பட போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்த்து பின்பு ஓய்வு பற்றி யோசிப்பேன். ஆனால் நான் கிரிக்கெட்டை இப்போதும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.
மேலும் அடுத்த ஆகஸ்ட் வரை ஆஸ்திரேலியா பெரும்பாலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் எனக்கு பெரிய இடைவெளி கிடைக்கப்போகிறது. எனவே அனைத்தையும் மதிப்பிடுவதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. அதனால் தற்போது என்ன நடந்தது என்பதையும் தாண்டி எனது பயணத்தில் நான் சிறப்பாக செயல்பட்ட தருணங்களும் உள்ளது”என்று கூறினார்.
இருப்பினும் சுமாரான பார்மில் இருக்கும் அவருக்கு பதிலாக அடுத்த டி20 உலக கோப்பைக்குள் தரமான அணியை உருவாக்குவதற்காக புதிய கேப்டனை ஆஸ்திரேலிய வாரியமே விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு காலத்தில் அதிரடிக்கு பெயர் போன இவர் 2019க்குப்பின் இழந்த பார்மை மீட்டெடுக்க முடியாமல் நீண்ட காலமாக தவிப்பதால் பேசாமல் ஓய்வு பெறும் முடிவை எடுக்குமாறு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பதிவுசெய்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now