
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் டாஸை வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்கா லெவனில் இடம்பிடித்தார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், பென் துவார்ஷூயிஸ், தன்வீர் சங்கா மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.