-mdl.jpg)
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்க நினைக்கும் வீரர்களை கழற்றி விட்டு விரும்பும் வீரர்களை மற்ற அணியிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி வருகின்றன. அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட உள்ளார் என்ற செய்தி மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதில் கபில் தேவுக்கு பின் தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அசத்திய அவர் நாளடைவில் காயத்தால் தடுமாறி 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டார்.
அதன் காரணமாக 2022 சீசனில் மும்பை தக்க வைக்க தவறிய ஹர்திக் பாண்டியாவை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய பாண்டியா முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்து 2023 சீசனிலும் குஜராத்தை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். இதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தை மிஞ்சி இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு பாண்டியா முன்னேறியுள்ளார்.