-mdl.jpg)
இந்திய மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் நெருங்க நெருங்க, உலகக் கோப்பை குறித்தான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் சென்று கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி 2013ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதுதான், கடைசியாக ஒரு ஐசிசி தொடரை இந்தியா வென்றதாக இருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் இதுவரை வெல்லவில்லை. மேலும் சொந்த நாட்டில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி வென்று இருந்தது. எனவே இந்த முறை இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுவதுமாக நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களிடமும் அதிகம் இருக்கிறது.
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை எவ்வாறு அமைப்பது? எந்த வீரர்களை எந்த இடத்தில் களம் இறக்குவது? என்பது தொடர்பாக நிறைய ஆலோசனைகள் வெளியில் மூத்த வீரர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த வகையில் ரவி சாஸ்திரி விராட் கோலியை நான்காம் இடத்தில் விளையாட வேண்டும் என்று கேட்டு இருந்தார். அதே சமயத்தில் விராட் கோலி நான்காம் இடத்தில் விளையாட கூடாது, அது மிகவும் ஒரு தவறான முடிவாக அமைந்துவிடும். அவர் எந்த அளவுக்கு பேட் செய்ய தாமதமாக வருகிறாரோ அந்த அளவுக்கு எதிர் அணிக்கு நல்லது என்று சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.