
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், மறுபக்கம் திலக் வர்மா 24 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், ஷிவம் தூபே 30 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தலா 9 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 37 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 13 சிக்ஸ்ர்கள், 7பவுண்டரிகள் உள்பட 135 ரன்களைச் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.